Writings of His Holiness Siddhar Arasayogi Karuwooraar
தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் வருகின்றவர்கள் பெரிய கோயிலுக்குள் சென்று கருவறையிலுள்ள பெரியவுடையாரை வணங்கி வழிபட்டுச் செல்பவர்கள் பாதிப் பேருக்கு மேல் இருக்காது. ஆனால், கோயிலுக்குள் சுற்றி வரும்போது கோபுரத்தருகில் அருட்கேணிக் கரையில் எழுந்தருளியிருக்கும் சித்தர் கருவூறாரை எல்லோருமே வழிபட்டுச் செல்வார்கள். அதிலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ளவர்களும், அதன் அண்மை மாவட்டத்தில் உள்ளவர்களும் சித்தர் கருவூறார் அவர்களைத் தங்களுடைய குலதெய்வமாக நினைத்து வழிபடுகின்றார்கள்.
வாராவாரம் 'குரு வாரம்' என்று கூறப்படும் வியாழக் கிழமையில் சித்தர் கருவூறாரை நேரில் வந்து வழிபடுகின்றவர்களும் தங்கள் தங்கள் இல்லத்தில் இவரது திருவுருவப் படத்தை வைத்து வழிபடுகின்றவர்களும் ஏராளமாக உள்ளனர். ஏறத்தாழ எல்லோருமே இவரை ‘குரு’ என்றும் ‘குருசாமி’ என்றும், ‘குருநாதர்’ என்றும், ‘குருதேவர்’ என்றும் போற்றி வணங்கி வழிபடுகின்றவர்களாக இருக்கின்றார்கள். இப்படி, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறார் அவர்களுக்கு ஏராளமான பத்தர்களும் எண்ணற்ற திருச்சபைகளும், சங்கங்களும், வார வழிபாட்டு மன்றங்களும், திருவிழாக் கொண்டாடும் கழகங்களும், இவருடைய புகழ் பரப்பும் குழுக்களும் இருக்கின்றன.
ஆனால், பொதுவாகத் தமிழ் நாட்டிலே எதையும் வரலாற்றுப் போக்கில் அல்லது பின்னணியில் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இல்லையென்பதால் இம்மாபெரும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முன்வரவே இல்லை.
இசையோடு கூறப்படும் தத்துவக் கருத்துக்களே கீதை எனப்படும். இது ஒரு தூய தமிழ்ச் சொல்லே. பாரத காலத்துக் கண்ணதேவன் ஒரு தமிழனே. கண்ணதேவன் பாரதப் போரின் போது தூய தமிழில் அருட்சினனுக்குக் கூறிய அறக்கருத்துக்களே இன்று சமசுக்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பகவத் கீதை என்று பாராட்டிச் சீராட்டிப் பலராலும் பயிலப் படுகின்றது. பாரத காலத்து இந்தியா முழுதும் தமிழே ஆட்சி மொழியாகவும், பேச்சு வழக்கு மொழியாகவும் இருந்தது.