Writings of His Holiness Siddhar Arasayogi Karuwooraar

URL: gurudevartamil.indhuism.org/Elanampattiyaar/?%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D__%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81

மேலை நாட்டினரின் தமிழ்ப் பற்று

மேனாட்டு மதத்தினரால் தமிழ் வளர்ந்த விதம்!:-

காலப் போக்கில் தமிழர்கள் மொழியுணர்வையும், அறிவையும், பற்றையும், பாசத்தையும், பிடிப்பையும், நம்பிக்கையையும், ஆர்வத்தையும், ஈடுபாட்டையும்... இழக்கலாயினர். அதனால், தமிழரின அரசு, சமயம், சமுதாயம், கலை, தொழில், அகவாழ்வுக்குரிய பண்பாடு, புறவாழ்வுக்குரிய நாகரீகம்.... முதலிய அனைத்தும் சீரிழந்து சிதைந்து நலியலாயின. நல்ல காலமாகக் கிறித்துவ சமயத்தைப் பரப்பிட வந்த பாதிரியார்கள் “தமிழைக் கற்றால்தான் தமிழரை மதமாற்றம் செய்ய முடியும்” என்ற பேருண்மையை உணர்ந்தனர். அதனால் கிறித்துவ சமய போதகர்கள் தமிழ்மொழி போதகர்களாக மாறினார்கள். அதனால் ‘இராபர்ட்டி நொபிலி’ என்ற போதகர் ‘ஞான உபதேச காண்டம்’, ‘மந்திர மாலை’, ‘ஆத்தும நிர்ணயம்’, ‘தத்துவக் கண்ணாடி’, ‘ஏசுநாதர் சரித்திரம்’, ‘ஞான தீபிகை’, ‘நீதிச் சொல்’ முதலிய பல உரைநடை நூல்களை எழுதினார்.

‘கான்ச்டாண்டியன் ஜோசப் பெஸ்கி’ எனும் ‘வீரமாமுனிவர்’ [கி.பி.1700இல் தமிழ்நாடு வந்தவர்] என்பவர் தமிழ் மொழி எழுத்துக்களில் எகர ஏகாரங்களுக்கும், ஒகர ஓகாரங்களுக்கும் தெளிவான வடிவமைப்பு வேறுபாட்டை உருவாக்கிக் கொடுத்தார். முதன் முதலில் தமிழ் மொழியில் ‘சதுரகராதி’ என்றோர் அகராதியை வெளியிட்டார். தமிழில் உள்ள புராண இதிகாசங்களுக்குச் சமமாக ஏசுநாத பெருமானின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரின் வரலாற்றைத் தேம்பாவணி எனும் காப்பியமாக எழுதினார். இது மட்டுமின்றித் ‘திருக்காவலூர்க் கலம்பகம்’, ‘கித்தேரி அம்மை அம்மானை’, ‘அடைக்கல மாலை’, ‘தமிழ்ச் செய்யுள் தொகை’, ‘தொன்னூல் விளக்கம்’, ‘பரமார்த்த குரு கதை’, ... எனும் நூல்களை எழுதினார்.

சீகன் பால்கு ஐயர்: செர்மானிய நாட்டவர் இவர். 1706ªல் தரங்கம்பாடி வந்தார். இவர் ‘புரோட்டஸ்டாண்ட்’ எனும் கிறித்துவ மதப்பிரிவின் முதல் குரு. இவரே முதன் முதலாகத் தமிழ் நூல்களை அச்சிட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். ‘தமிழ் மொழியின் மூலம்தான் தமிழரை வெல்ல முடியும்’ என்பதை உணர்ந்து பெரும்பாலான தமிழர்களை விட அதிகத் தமிழ்ப் பற்றும் ஆர்வமும் கொண்டு விளங்கினார். கிறித்தவ வேதமான ‘பைபிளை’த் தமிழில் எழுதினார். ‘தமிழ் மொழிக்கும் இலத்தீன் மொழிக்கும் ஏற்படக் கூடிய உறவுதான் மதமறுமலர்ச்சிக்கும் அல்லது மதம் பரப்பும் பணிக்கும் வேர்’ என்ற கருத்தை உணர்ந்து ‘தமிழ் இலத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு’ என்னும் நூல் எழுதினார்.

எல்லீஸ் துரை: இவர், ‘தமிழர்கள் தமிழை மறந்ததால் துறந்ததால் மாபெரும் வீழ்ச்சியை அடைந்து நிலையான தாழ்ச்சியைப் பெற்று விட்டனர்’ என்ற பேருண்மையை உணர்ந்தார். ‘எப்படியும் தமிழர்களை ஒற்றுமைப் படுத்த, விழிச்சியைப் பெறச் செய்ய, எழுச்சியுறச் செய்யத் தமிழ் மொழியை வளப்படுத்தி வளர்த்திட்டால்தான் முடியும். அதற்கு தமிழ் இலக்கியங்களை அழியாமல் காத்திடல் வேண்டும்’ என்ற பேருண்மையை நன்குணர்ந்தார். வாய்கிழியத் “தமிழ் வாழ்க” என்று கூக்குரலிடும் தமிழினப் போலிகளையும் கூலிகளையும் விட ஆயிரமாயிரம் மடங்கு “உண்மையான தமிழ்த் தொண்டை”த் துவக்கினார். திரு. முத்துச்சாமி பிள்ளை என்பவரின் துணை கொண்டு பழம்பெரும் தமிழ் ஏடுகளை யெல்லாம் ஒன்று திரட்டித் தொகுத்தார். அவற்றின் பின்னணியில் வீரமாமுனிவரின் வரலாற்றையும் எழுதினார். அதாவது “தமிழறிஞர்களைப் போற்றுவதே தமிழை வளர்ப்பது! தமிழை வளர்ப்பதே தமிழரைக் காப்பது!” என்ற பேருண்மையைச் செயலாக்கினார். இவரே, திருக்குறளில் உள்ள முதல் பதின்மூன்று அதிகாரங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்க உரை எழுதினார். அதற்கு மேல் செயல்பட இயற்கை அநுமதிக்க வில்லை.

இரேனியஸ் ஐயர்: இவர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் தங்கிச் சமயப் பணி புரிந்த மேனாட்டார். இவர், ‘மக்கள் பேசும் எளிய தமிழ் உரைநடையின் மூலம்தான் மதப் பணியைச் சிறப்பாக ஆற்ற முடியும்’ என்று கண்டறிந்தார். அதன்படியே, ‘வேத உதாரணத் திரட்டு’ எனும் உரைநடை நூலை எழுதினார். பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் உரைநடை நூல்களை மிகுதியாக எழுதினார் என்பதையும், சித்தர் ஏளனம் பட்டியார் எனப்படும் கண்டப்பக் கோட்டைச் சித்தர் கருவூறார் இராமசாமி பிள்ளையும், எமது தந்தை சித்தர் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி பிள்ளையும் மிகுந்த உரைநடை நூல்களையும் எழுதினார்கள் என்பதையும்; எம் தந்தை ‘கூடுமானவரை யாம் கவிதையே எழுதக் கூடாது; அனைத்தையும் உரைநடையில்தான் எழுத வேண்டும்’ என்று ஆணையிட்டுச் சென்றுள்ளதையும் ஈண்டு குறிப்பது பொருத்தமானதாகும்.

டாக்டர் G.U. போப்:- இவர் ‘ஆக்ஸ்போர்டு’ பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பெருமானார் ஆவார். தமிழராய்ப் பிறந்தவர்களில் கோடியில் ஒருவருக்குக் கூட இல்லாத அளவு எல்லையற்ற தமிழ்ப்பற்றும், உணர்வும், ஈடுபாடும், வெறியும் பெற்றிருந்தார் இவர். தமிழினத் தலைவர்களில் எவருக்கும் இதுவரை ஏற்படாத தமிழ்ப் பற்றும், உணர்வும், ஈடுபாடும், வெறியும் அன்னியரான இவருக்கு இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில், இவரைப் போன்று தமிழ் மொழியை விரும்பும் ஒரே ஒரு தலைவன் தோன்றியிருந்தால் கூட இந்நேரம் ‘தமிழ்மொழி’, ‘தமிழினம்’, ‘தமிழ்நாடு’ எனு மூன்றும் உரிமை வாழ்வு பெற்று உயர்ந்திருக்கும். ஆனால், அதுதான் நடக்க முடியாதபடிப் போலிகளும், கூலிகளும், அரைகுறைகளும், தன்னல வெறியர்களும், தரமற்றவர்களும், உரமற்றவர்களும், திறமற்றவர்களும், தீரமற்றவர்களும், வீரமற்றவர்களுமே.... தமிழினத்தின் தலைவர்களாக வரக் கூடிய வாய்ப்பு இருந்து வருகிறது! இதற்கென்ன செய்வது!

G. U. போப் அவர்கள் திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அத்துடன், நாலடியார், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை முதலியவற்றில் சிலசில பாடல்கள் மொழிபெயர்த்திட்டார்.

இவர் தம் கல்லறையில் “தாழ்மையுள்ள தமிழ் மாணவன்” என்று எழுதி வைக்கச் சொல்லி இறந்தார். இந்த அளவு தமிழ்மொழியிடம் பற்றும், பாசமும், அன்பும், அக்கரையும், ஆர்வமும், பிடிப்பும்..... உள்ள தமிழன் கோடியில் ஒருவராவது தோன்றியிருப்பின் என்றோ தமிழும், தமிழினமும், தமிழ்நாடும் உய்ந்திருக்கும். இம்மாபெரும் தமிழ்த் தொண்டர் சாயாபுரத்தில் சமயப்பணி ஆற்றினார். இவர் பெயரால் கல்லூரி ஒன்று நடைபெறுகிறது அங்கே.

கால்டுவெல் ஐயர்:- இவர் 1889இல் அயர்லாந்து நாட்டில் இருந்து சமயப்பணி ஆற்ற வந்தவர். திருநெல்வேலி மாவட்டத்து ‘இடையன்குடி’யில் தங்கித் தமிழ்ப் பணியும், சமயப் பணியும் ஆற்றி வந்தார். இவர் ‘திருநெல்வேலி வரலாறு’ என்று ஒரு நூல் எழுதினார். இவரே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்ண்டம், துளு முதலிய அனைத்து மொழிகளையும் ஆராய்ந்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்கிற மாபெரும் ஆராய்ச்சி நூலை எழுதினார். இதன் மூலம் மேலே குறிப்பிட்ட எல்லா மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையே என்ற கருத்தை நிலை நாட்டினார். அத்துடன் அனைத்து மொழிகளுக்கும் தமிழே தாய்மொழி என்ற பேருண்மையையும் உலகம் ஒப்புக் கொள்ளுமாறு உணர்த்தினார். இது போன்ற தொண்டினைச் செய்யும் தமிழறிஞர் யாராவது ஒருவர் எப்பொழுதாவது தோன்றி வந்துவிட்டால் கூடத் தமிழொழி, தமிழ் இனம், தமிழ் நாடு உய்வு பெற்றிருக்கும்.

இப்படிக் கடல் கடந்து வந்த மேலை நாட்டினர்கள் தமிழ் மொழியை வளப்படுத்தினால்தான் தாங்களும் தங்களது கொள்கைகளும் வளர முடியும், வலிமை பெற முடியும், நிலைத்த வாழ்வு பெற முடியும் என்று உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால், இன்றுவரை, தமிழின் பெயரைச் சொல்லிக் கொண்டு பொருளும், புகழும், பதவியும் தேடிக் கொண்ட அரசியல் வாதிகள் தமிழை வாழ வைத்தால்தான் அல்லது வளர்த்தால்தான் அல்லது செழிப்படையச் செய்தால்தான் தங்களது கொள்கைகளும், குறிக்கோள்களும் வாழ முடியும், வளர்ச்சியடைய முடியும், வளப்பட முடியும், செழிச்சியடைய முடியும் என்ற பேருண்மையை உணர மறக்கிறார்கள், செயலாக்க மறுக்கிறார்கள். இதற்கென்ன செய்வது?! தமிழ்த் தொண்டாற்றிய மேனாட்டு நல்லறிஞர்களின் வரலாறுகளை சொல்லிக் காட்டுவதின் மூலமாவது அவர்களைத் திருத்த முடியாதா என்று எண்ணுகிறோம் எம்மைப் போன்றோர்.