Writings of His Holiness Siddhar Arasayogi Karuwooraar

URL: gurudevartamil.indhuism.org/?%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...

பீடாதிபதிகள் பற்றி...

    கடந்த மூன்று உகங்களில், இந்த இந்து மதத்தைக் காலப்போக்கில் ஏற்படக்கூடிய எல்லாவகையான பாதிப்புகளிலிருந்தும், தளர்ச்சி நிலைகளிலிருந்தும், இழப்பு நிலைகளிலிருந்தும் சரி செய்து காத்திட ஒன்பது பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றி ஞானாச்சாரியாராகப் பணிபுரிந்திட்டனர். இவர்கள்,

   1.  அனாதிக கருவூறார்,
   2.  ஆதிக கருவூறார்,
   3.  தொன்மதுரைக் கருவூறார்,
   4.  தென்மதுரைக் கருவூறார்,
   5.  பஃறுளியாற்றங்கரைக் கருவூறார்,
   6.  குமரியாற்றங்கரைக் கருவூறார்,
   7.  கபாடபுரத்துக் கருவூறார்,
   8.  தாமிரபரணியாற்றங்கரைக் கருவூறார்,
   9.  வைகையாற்றங்கரைக் கருவூறார் எனப்படுவார்கள்.

    நான்காவது உகமான இக்கலியன் உகத்தில் பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியாக அமராவதியாற்றங்கரைக் கருவூறாரும் (கலியன் உகம் 3001 முதல் 3251 வரை செயல்பட்டிட்டார்), பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதியாகக் காவிரியாற்றங்கரைக் கருவூறாரும் (கலியன் உகம் 3886 முதல் 4141 வரை செயல்பட்டிட்டார்) தோன்றிட்டார்கள். இவர்கள் இருவருக்கு மட்டுமே மற்ற ஒன்பது பதினெண்சித்தர் பீடாதிபதிகளுக்கும் ஏற்படாத பணிநிலைகள் ஏற்பட்டன. அதாவது, கலியன் உகம் பிறந்து 1359 ஆண்டுகள் கழித்து இந்த இந்துமத இந்தியாவுக்குள் வந்திட்ட பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரின் வேதமதக் கலப்பாலும், சமசுக்கிருதமொழி ஆட்சியாலும் புதிதாக உருவாகிட்ட ஹிந்து மதம் என்பதிலிருந்து, நான்கு உகங்களாக இருந்து வரும் பதினெண் சித்தர்களுடைய தமிழ்மொழியை ஆட்சிமொழியாக உடைய இந்துமதத்தை வேறுபடுத்திப் பிரித்துத் தனியாக நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இம்முயற்சியிலேயே இவர்கள் இருவர் வாழ்வும் முடிவின்றி நிறைவு பெற்றது.
     பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியான ஞானாச்சாரியார், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் அமராவதியாற்றங்கரைக் கரூரில் பசுபதீசுவரர் கோயிலைக் கட்டித் தத்துவ நாயகமாகச் செயல்பட்டார். அதன் மூலம், மதவழிச் சமுதாயப் புரட்சியைச் செய்தார். அதன் பயனாக, வைகையாற்றங்கரை மதுரையில் அருளாட்சித் திருநகரில் மூன்று உகங்களிலும் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களிலும் உள்ள நூல்களையெல்லாம் ஒன்று திரட்டி நான்காவது தமிழ்ச் சங்கம் அமைத்தார். அதன்மூலம், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி நல்ல வளவளர்ச்சியைப் பெற்று மீண்டும் ஆட்சி மீட்சியைப் பெற்றது. ஆனால், பாண்டிய மன்னனான ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் இவருடைய அறிவுரைப்படி செயல்படாததால் அனைத்தும் சிதைந்து சீரழிந்தன. மதுரை மாநகரம் இடித்துத் தகர்க்கப்பட்டுப் பேரழிவிற்குள்ளாக்கப் பட்டது; தமிழ்ச்சங்க ஏடுகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன; தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். அப்பேரழிவுகளால் தமிழினம், தமிழ்மொழி, தமிழர் மதமான இந்துமதம்  ,,,, முதலிய அனைத்தும் நலிந்து மெலிந்து 'அனாதை நிலையையும்',  'அடிமைநிலையையும்'  பெற்றிட்டது.

     அப்பேரழிவுகளையும், இழிவுகளையும், இழப்புகளையும் ஈடுகட்டுவதற்காகவே; பத்தாவது ஞானாச்சாரியார் 'இந்து மறுமலர்ச்சி இயக்கம்' என்ற அமைப்பையும்; அதன் கீழ் அருட்பணி விரிவாக்கத் திட்டம், தமிழின மொழி மத விடுதலை இயக்கம், தமிழ் மெய்ஞ்ஞான சபை, முத்தமிழ்ச் சங்கம்,... முதலிய 48 வகையான நிறுவன நிருவாகங்களையும் உண்டாக்கினார். அவற்றையெல்லாம் நிருவகிக்க வாழையடி வாழையாகப் பத்தியார், சத்தியார், சித்தியார், முத்தியார் என்ற நான்கு வகையாரும் தோன்றுதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு; தான் கட்டிய கரூர்ப் பசுபதீசுவரர் கோயில் நிலவறையில் சென்று நீள் தவத்திலாழ்ந்தார்.  

     இவரைப் போலவே, பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதியான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் தமது முயற்சியில் முழுமையான வெற்றி காண முடியாத நிலையில்; தாம் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் நிலவறைக்குள் சென்று நீள் தவத்திலாழ்ந்திட்டார்.

      இவரையடுத்து,  பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகத் தோன்றிய அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குவலயகுருபீடம், நிறையக்ஞர், பரபிறம்மம், கருவறை மூலவர்களின் அம்மையப்பர், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள், பத்தாவது,  பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம் முதலியவைகளைச் செயலாக்கும் பணியில் ஈடுபட்டார்.

      இதற்காகக் கருகுலம், குருகுலம், தருகுலம், திருகுலம் என்ற நான்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதியாகிய இவர் பதினெண்சித்தர்களுடைய சித்தர் நெறியெனும் சீவநெறியான 'மெய்யான இந்துமதத்தின்' வரலாறு, தத்துவ விளக்கம், செயல் சித்தாந்த விளக்கம், அருள் நிலையங்கள் பற்றிய விளக்கம், அருளாளர்கள் பற்றிய விளக்கம் முதலியவைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டார்.

    இந்துமத மறுமலர்ச்சிக்காகவும், வள வளர்ச்சிக்காகவும், ஆட்சி மீட்சிக்காகவும், அருளை அநுபவப் பொருளாக வழங்கக் கூடிய சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் எனும் முத்தரத்தார்களையும் உருவாக்கி 48 வகைக் கருவறைகளையும், 48 வகை வெட்டவெளிக் கருவறைகளையும், 48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகளையும், 48 வகைக் கோயில் மூலக் கருவறைகளையும் புத்துயிர்ப்புச் செய்து அருட்கோட்டமாக்கும் பணியில் ஈடுபட்டார்.  எனவேதான், இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள தமிழின மொழி மதப் பற்றாளர்களை ஒன்று திரட்டி ஒற்றுமைப் படுத்தி ஒருமைப் படுத்திடும் பணியில் பதினெண் சித்தர் மடத்தின் அனைத்து வகையான செயல்திட்டங்களையும் செயலாக்கினார்.  

     இதன்படிதான், அருளாட்சி நாயகமாக வாழ்ந்து இந்துமதப் பேரரசு எனும் பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கிச் செயல்பட்டிட்ட தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் வரலாறு, வாழ்வியல், போதனை, சாதனை பற்றிய விளக்கங்களைச் சிறுசிறு நூல்களாக மலிவு விலையில் வழங்கும் பணியைத் துவக்கினார்.

இப்பணியின் தொடர்ச்சியே இந்த வலைத்தளத்தின் மூலம் இந்தப் பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் கருத்துக்களை  வெளியிடுவது.