இங்கே உள்ளீர்கள்:   ஆரம்பம் > அருளாட்சி அமைப்புப் பணி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

அருளாட்சி அமைப்புப் பணி

‘அருளாட்சி அமைப்புப் பணி விளக்கத் திருவோலை முதல்படி’

அருட்பணி விரிவாக்கத் திட்டத்திற்காகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் சித்தரடியார் குருவழி வாரிசு சோ.இரவீந்திரன் அவர்களுக்கு,

‘ஞாலகுரு’, குருமகா சன்னிதானம், சித்தர் கருவூறார் 25.1.1982 நள்ளிரவில் அஞ்சல்களுக்கிடையில் விடுக்கும் அவசர அவசிய அஞ்சல்.

இதனை ‘அருளாட்சி அமைப்புப் பணி விளக்கத் திருவோலை முதல்படி’ என்று ஏற்று நகலெடுத்து அனைவருக்கும் அனுப்புக.

1. தாத்தாக்கள் ஆத்தாக்கள் அருளால் யாவும் நலமாகட்டும். வெற்றியாகட்டும், உண்மையாகட்டும், நாநிலத்தவர்க்கு நன்மை நல்கட்டும்.

2. தாங்கள் அனுப்பிய அஞ்சல்கள், பரிந்துரை அஞ்சல்கள், அடியான் தேர்வு அஞ்சல்கள், காணிக்கைகள் எல்லாம் கிடைத்தன.

3. நாம் பொருளுக்காக அருளை விற்கும் மந்திரவாதிகள் அல்ல. ஆனால், மக்கள் விலை கொடுத்து வாங்குபவைகளைத்தான் மதிப்பர், போற்றுவர், பயன்படுத்துவர்.... என்பதால்தான் அன்றிலிருந்து இன்று வரை குருகாணிக்கை பெற்றே அருட்செல்வங்கள் வழங்கப் படுகின்றன. ஆனால், ஏழை, எளியவர், வறியவர், பாமரர், .... பணம் இல்லாததால் புறக்கணிக்கப் பட்டு விடக் கூடாது. எல்லோரையும் உலகியலில் உலவியே தெய்வீகச் சத்திகளை, அருளுலக நிலைகளை அநுபவப் பூர்வமாக அறியச் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கு, போக்கு, ஊக்கு.... இவற்றை நினைவில் கொண்டு செயல்படுங்கள். எல்லோருக்கும் அருள் வழங்குங்கள். பேய்கள் ஓடட்டும், நோய்கள் நலமாகட்டும், மந்திரவாதிகளால் ஏற்பட்ட கேடுகள் அழியட்டும், அருள் வித்துக்கள் விதைக்கப் படட்டும். அவை முளைத்துக் கிளைத்துச் செழித்து வளரட்டும்.

4. இவ்வஞ்சல் கண்டது முதல் எந்த வீட்டுக்கு சென்றாலும் அவர்களை மறுநாள் அல்லது வசதிப்படி சிலநாள் கழித்தும் பால்குடம், மஞ்சள் நீர்க்குடம், காவடி, தீச்சட்டி எடுத்து ஊர்த்தெய்வ சன்னிதானங்களில் எல்லாம் பூசை செய்து முடிவில் அவரவர் வீட்டில் கொண்டு போய் வைத்து வணங்கும் கடவுளாக ஆக்கிக் கொள்ளச் சொல்லுங்கள். மாதாமாதம் செளடாம்பிகையம்மன் சன்னிதானம் ஆ.கு.ரா.செ.வெங்கட்டரமணன் B.E. வீட்டில் [1/5, பழைய தெரு, வேம்படிதாளம் - 637504] நடக்கும் பருவபூசையில் வந்து தொடர்ந்து கலந்து அருளைப் பெற்றுச் செல்லச் சொல்லுக!

5. நம்மிடம் வருபவர்களை நாம் ஏற்றுக் கொள்வோம். அருட்பட்டங்கள் வழங்குவோம். ஆனால், அவர்கள்தான் ஏட்டறிவு, பட்டறிவு, பயிற்சி, முயற்சிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். யாரும் அவசரப் பட்டு அடியானாக, அடியாளாக, அடியாராக மாறியவுடன் பிறர்க்கு அருள் வழங்குவது, மாயங்கள் செய்வது, இயற்கையை வெல்லுவது.... முதலியவற்றை முழுமையாகச் செய்திட முடியும் என்று கருதிடக் கூடாது. எல்லாம் படிப்படியாக, அடிப்படையோடு, திருவருளால், குருவருளால் நிறைவேறும். அதற்குரிய பொறுப்பும், பொறுமையும், தரமும், திறமும், உரமும், மறமும், தீரமும், வீரமும், தியாகமும் உள்ளவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து “அருள்வழங்கு நிலையினராக” ஆக்குதலே நமது குருபாரம்பரிய மரபு. எனவே, அவசரக் காரர்களை, பேராசைக் காரர்களை, பொருள் வெறியர்களை, புகழ்ப் பித்தர்களை, தன்னலக் காரர்களை.... நமது நேரடி வாரிசுகளாகத் தேர்ந்தெடுக்காமல் செயல்படுங்கள். அனைவர்க்கும் அஞ்சல் நகல்களை வழங்கியும் படித்துக் காட்டியும் அறிவியுங்கள். எச்சரிக்கை! குருவாணை!

6. பல்வேறு அலுவல்களுக்கிடையில் தாங்கள் பரிந்துரைக்கும் அன்பர்களின் நிலைகளை உடனுக்குடன் ஆராய முடியவில்லை. எனவே, நீங்கள் அன்றாடம் அல்லது செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மேற்படி அடியானாகும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அருள் வழங்கிக் காவடி, தீச்சட்டி, நீர்க்குடம் தாங்கி ஊரிலுள்ள கோயில்களுக்கு ஊர்வலமாகச் சென்று செளடாம்பிகை சன்னிதான யாக குண்டம் வந்தடைந்து ஞானக் காட்சி காணச் செய்யுங்கள். இவற்றால், உங்களுக்குக் கிடைக்கும் முடிவுகளையும்; அவர்களுடைய வேண்டுகோள்களையும் தெளிவாக விரிவாக எழுதி யனுப்புங்கள். யாம் நேரில் கண்டுதான் அவர்களை முழுமையாக அருளுலக மனிதர்களாக ஒப்புதல் வழங்க முடியும். அதன்பிறகே, அவர்கள் செயல்படலாம். அதுவரை வார வழிபாட்டுக் கழகம், அருள்நெறித் திருக்கூட்டம், சமய இலக்கிய மன்றம், சித்தர் இசைச் சங்கம், சித்தர் நாடகச் சபை, நாயன்மார் ஆழ்வார்களின் பெயரால் அமைப்புக்கள்.... முதலியவைகளை உண்டாக்குங்கள். ஒவ்வொன்றுக்கும் தலைவர், செயலர், பொருளாளர் என்று மூன்று பொறுப்பாளர்களை அமையுங்கள். கிராமம் தவறாமல் சித்தர் நெறிக் கழகம், பத்தர் கழகம், அருளாளர் குழு, சமயக் கலை பயிலும் மன்றம், இ.ம.இ. கிளை அலுவலகம் முதலியவைகளை உண்டாக்கி நம்மிடம் அடியானாக மாற விரும்புகிறவர்களை மேற்படி அமைப்புக்களில் பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்படச் சொல்லுங்கள். எப்படியும் யாம் ஓரிரு மாதங்களில் அங்கு சுற்றுப் பயணம் வருவோம். அப்போது இவர்கள் மேற்படி அமைப்புக்களை எப்படி வளர்த்துச் செயல்பட்டுள்ளார்கள் என்பதை ஆராய்ந்து அருட்பட்டங்களை வழங்குவோம்.

7. இப்போது குருபாரம்பரிய மரபுப்படி தானியங்கள், பருப்புகள், புளி, மிளகாய், காணிக்கை பெற்றுச் செயல்படுங்கள். எல்லோரையும் சித்தரடியான்களாக ஏற்று அருள்வழங்கிக் காத்திடுங்கள். ஆனால், அவர்கள் நமது வாரிசாகச் செயல்படும் நிலையை எமது நேரடிச் சோதனைக்குப் பிறகே பெறுவார்கள். அதற்காக யாரும் ஆர்வம் இழக்கத் தேவையில்லை. ஞானக் காட்சி காணல்; பழம்பிறப்புக்களை உணர்தல்; கடவுள்களைக் காணுதல்; அருவ, உருவ, அருவுருவங்களோடு தொடர்பு கொள்ளல்.... முதலிய சத்திகளையும், சித்திகளையும் தக்கவர்க்கு வழங்குங்கள். ஒவ்வொருவரும் முயன்று 8, 16, 32, 64, 96, 108, 243, 1008 ஞானக்கொடிகளை ஏற்றுவிக்கட்டும். அதிகமான கொடிகளை ஏற்றுவிப்பவர்கள் அருளுலகில் விரைந்து வளர, வளம்பெற, வலிமையுற முடியும்.

8. மிகப் பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ‘இந்து மதம்’ என்று வெளிநாட்டாரால் அழைக்கப் படும் இந்தியாவின் பூர்வீக மதமான “சித்தர் நெறி” உண்மை வடிவில் வெளியுலகுக்கு அறிமுகமாகிடும் நிலை ஏற்பட்டுள்ளது. “பிற + மண்ணிலிருந்து வந்தவர் = பிறமண்ணினர் = பிறாமணர் ≡ அன்னியர் = வெளிநாட்டவர் - “தங்களுடைய வேதநெறிகளைச் சித்தர் நெறிகளோடு கலந்து செயல்பட்டதால்தான்; இந்துமதம் தனது பேராற்றலை இழக்க நேரிட்டது. ஆதியில் இருந்த பயன்மிக்க, நன்மைமிக்க, உண்மையான இந்து மதம் பாதியில் கற்பனை, பொய், மடமை.... முதலியவைகளால் நலிவுற்று மெலிந்தது. இப்போது மீண்டும் ஆயிரமாயிரம் சித்தர் நெறிச் செல்வர்கள், அருளாளர்கள்.... தோற்றுவிக்கப் பட்டுச் சித்தர் நெறி நலிவுகளையும், மெலிவுகளையும் அகற்றிக் கொண்டு வலிவும், வனப்பும், வாலிப்பும், பொலிவும், செழிப்பும் பெற்று வளர ஆரம்பித்து விட்டது. அதனால், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் செயல்வீரர்களின், தளபதிகளின், நாயகங்களின்..... சுற்றுப் பயணங்கள் மக்களுக்கு “ஆதி இந்துமதத்தை”, அதாவது ‘சித்தர் நெறி’யை அநுபவப் பொருளாக வழங்கவே பயன்பட வேண்டும். ‘கண்டவர் விண்டதில்லை’; ‘விண்டவர் கண்டதில்லை’ என்ற வாசகம் தவறானது என்று மெய்ப்பிக்க வேண்டும். சாதி, மத, பொருளாதார வேறுபாடின்றி யார் வேண்டுமானால் ‘தன்னையறிதல்’, ‘தலைவனை அறிதல்’, ‘வினை அறிதல்’, ‘உயிர் அறிதல்’, ‘ஞானக் காட்சி காணல்’, ‘இறவாமை பெறல்’, ‘பிறவாமை பெறல்’, ‘சித்திகள் பெறல்’, .... முதலியன நிகழ்த்தப் படும். அதற்காகவே, யாம் உருவாக்கியிருக்கும் அடியான்கள், அடியாள்கள், அடியார்கள்.... பாடுபட வேண்டும். அதாவது, நாம் நமது சத்திகள், சித்திகள், பிற சாதனைகள்.... முதலியவற்றிற்குச் சாட்சிகளையும், சான்றுகளையும் மனித வடிவில் உருவாக்குகிறோம். இதனால், நமது எழுத்துக் குவியல்கள் மக்களைத் திருத்தும் முன்னரே நமது படைப்புக்களான மனிதர்கள் நம் எண்ணப்படி மக்களைத் திருத்திடுவார்கள்.

9. இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு அருளாளரும் தமது பெயரால் ஒரு மதத்தை உண்டாக்கிச் சென்றிட்டனர். அதற்காகத் தங்களது அடைவுகளை ஒரு மத நூலாக, வேதமாக ஆக்கிட்டனர். ஆனால், சித்தர்கள் உருவாக்கிய இந்து மதத்தில் ஒரே காலத்தில் பல அருளாளர்கள் வாழ்ந்து பல நூல்களை உருவாக்கினால் கூட யார் பேராலும் புதிய மதம் உருவாகவே இல்லை. உருவாகவே முடியாது. ஏனெனில் ஆற்று நீர்களால் கடல்கள் அதிகமாகி நிலத்தை விழுங்கும் நிலை உருவாகவே உருவாகாது. அருட்செயல்களும், அருள் நிலையங்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். இந்து இறவாத நிலையை மறவாத மனிதர்களைத் தோற்றுவிப்பதே நமது கடமை. அதற்காகத்தான் எல்லா வழிபாட்டு நிலையங்களையும் ‘கோவில்கள்’ புத்துயிர்ப்புச் செய்து அருளூற்றுக்களாக, அருட்சூரியன்களாக.... ஆக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் நாம். இப்படிப்பட்ட நம்மைத் தவிர வேறு யாராலும் சமய, சமுதாய, அரசியல், கலை, தொழில், இலக்கிய, அறிவியல் துறைகளைச் செம்மைப் படுத்த, சமத்துவப் படுத்த, பொதுவுடமைப் படுத்த இயலவே இயலாது; முடியவே முடியாது! முடியாது! -- இப்பெருண்மையைச் சொல்லாலும் செயலாலும் விளக்கியே செயல்படுக! செயல்படுக! செயல்படுக!

10. ஆரவாரம், ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக, நிதானமாக, அடக்கமாக அறவழியில், அன்புவழியில், மென்மை வழியில் இனிமையாகச் செயல்படுங்கள்.

11. நம்மவர்களில் யாரும் யாருக்கும் முதலாளியாக மாறக் கூடாது. உழைப்புக் கேற்ற தேவைக்கேற்ற ஊதியம் பெறலாமே தவிரச் சுரண்டல் என்றோ ஏமாற்று என்றோ எதுவும் நம்மவர்களிடம் இருத்தல் கூடாது! கூடாது! கூடாது!

12. மலைமுகடுகளிலும், அலைகடல் பரப்புக்களிலும், மனித நடமாட்டமற்ற அடர் காடுகளிலும், குகைகளிலும், படுகைகளிலும், அருவிச் சாரல்களிலும், இருளடர்ந்த இடங்களிலும், பாழடைந்த இடங்களிலும், சுடுகாடுகளிலும், இடுகாடுகளிலும், புதைகாடுகளிலும் .... யாம் கற்றவையும், நோற்றவையும், பெற்றவையும், உற்றவையும், ஏற்றவையும் .... எல்லாப் பயிரின உயிரினங்களுக்கும் உய்வை வழங்க வேண்டும்! உயர்வை வழங்க வேண்டும்! தூய்மையை வழங்க வேண்டும்! வாய்மையை வழங்க வேண்டும்! யாவற்றையும் நன்மையாக்க வேண்டும்! யாவரும் உண்மை உணரும் ஆற்றலை வழங்க வேண்டும்! .... இப்படிப் பட்ட கொள்கையும் குறிக்கோளும் கொண்டே எமது பணி கடுமையான வெயில், மழை, காற்று, பனி, பசி, உறக்கம், களைப்பு, எதிர்ப்பு, ஏளனம் .... முதலிய அனைத்தையும் நீந்தி நிகழ்த்தப் பட்டு வருகின்றது. இன்று, எமது வாரிசுகளாக அருள் வழங்கப் புறப்பட்டிருக்கின்ற நீங்களனைவரும் நமது பணியில் ஆர்வமுள்ள அனைவரும் இவற்றை அன்றாடம் அடிக்கடி நினைவில் கொண்டு பொறுப்போடும், பொறுமையோடும், நுண்மையோடும், திண்மையோடும், உண்மையோடும், நன்மை விளைவிப்பதே நாட்டமாகக் கொண்டு செயல்பட்டிடல் வேண்டும். நமது முன்னோர்கள் கட்டிக் காத்தவைகளை அவசரத்தால் ஆத்திரத்தால் தட்டிக் கொட்டிக் கவிழ்ந்து வெட்டியாக வீணாக ஆக்கிடக் கூடாது. எச்சரிக்கை! குருவாணை! என் தந்தை “.... மகனே! நீ பிறரை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவோ! புகழுக்காகவோ! பொருளுக்காகவோ! எதையும் செய்து உன் பொழுதையும் ஆற்றலையும் வீணாக்கிடாதே!.... நீ ஆற்றப் போகும் பணிகள் உன் காலத்திலேயே முழுமை பெற்றாலும், அவை என்றென்றும் நிலைத்துப் பயன்படத் தேவையானவை தொடர்ந்து காலம் காலமாக ஆற்றப் பட்டாக வேண்டும். அதனால் அவசரமோ! ஆத்திரமோ! பதட்டமோ!.... இல்லாமல் பலரையும் உன் வாரிசுகளாக உருவாக்கிப் பரந்து பட்ட உலகெங்கும் அருட்பணிகள் நிகழ்ந்து இருளகல! இன்னல் நீங்க! மடமை நலிய! மூடத் தன்மைகள் ஒழியப் பாடுபட்டிடு.....” என்று [*சித்தர் காக்கையர் எனப்படும் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி, காக்கா வழியன் பண்ணையாடி, ‘முடிகணம்’ எனப்படும் ‘முடிகண்ட சோழபுரம்’, கரூர் வட்டம், திருச்சி மாவட்டம்] கூறியவைதான் நம்மனைவர் நினைவிலும் இருத்தல் வேண்டும். அதனால், அருட்பணி யாற்றுபவர்கள் மக்களுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்குங்கள். அதன்மூலம், தனிமனிதர்கள் நூறாயிரக் கணக்கில் தயாரான பிறகே நமது செயல்திட்டங்கள் மறுமலர்ச்சிப் பணிக்காகப் (Renaissance) புரட்சிக் கோலம் பூண்டிடும். “.... எல்லா மிரட்சிகளையும், வறட்சிகளையும், ஏற்றத் தாழ்வுகளையும், ஏமாற்றுக்களையும், சுரண்டல்களையும் புயலாகப் புறப்படும் புரட்சியால்தான் போக்க முடியும். அதற்காகத் தென்றெலெனக் கருத்துக்கள் எங்கும் பரவிய பின் ஊழிக் காலப் பெருவெள்ளம் போல், எரிமலையின் நெருப்பாறு போல்.... புரட்சி பிறக்கும். சிவன் ஊர்த்தவ தாண்டவம் ஆடுவான்; நெற்றிக் கண் திறக்கப்படும். மீண்டும் தேவ அசுரப் போர்! மானுட அரக்கப் போர்! மானுடர்க்கிடையிலான பாரதப் போர்!.... நிகழும்! நிகழும்! நிகழும்! நிகழ்ந்தே தீரும்! --- இந்த நினைவோடு செயல்படு நீ!....” என்று என் தந்தை கூறியவைகளை நினைத்து நினைத்துத்தான் என்னை இலைமறை காயாக வைத்துக் காத்து வருகிறேன். இப்போது, நீங்களெல்லாம் கொடி பிடித்து, முழக்கமிட்டு அருட்பணியாற்றப் புறப்பட்டு விட்டீர்கள். இனி நான் வெட்டவெளியில் தெரியும் மலையாகிடுவேன்; மலைப்பாக இருக்கிறது, களைப்பாக இல்லை. -- நம் பணிகளை விலைச் சரக்குகளாக ஆக்கி விடாதீர்கள். எச்சரிக்கை.

13. நீங்கள் உங்களுடைய அன்றாட வாழ்வைத் தெளிவான வரலாறாக எழுதி வாருங்கள். உங்களின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் சான்றுகளோடு விபரமாக எழுதுங்கள். உங்களால் நலம் பெறுபவர்களிடம் தாள்களில் முழு விபரங்களையும் சாட்சிகளோடு எழுதி வாங்கி வீரமாகாளி சன்னிதானத்துக்கும் எமக்கும் உங்கள் கோப்புக்கும் உரியதாக ஆக்குங்கள். அதுவே முறை, நெறி, நன்று --.

14. இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 26-ம் நாளை, இந்தியக் குடியரசு நாளை, அருளாட்சி நாளாகக் கொண்டாடிடல் வேண்டும். யாம் எமக்குரிய பதினெட்டாண்டு காலப் பயிற்சிகளையும், பதினெட்டு ஆண்டு கால முயற்சிகளையும் நிறைவேற்றி இல்லறமேற்ற இந்நாளே ‘இந்தியர் எழுச்சி நாள்’, ‘இந்துமத மறுமலர்ச்சி நாள்’, ‘அருளாளர்களின் சித்தி நாள்’, ‘மானுட நலக் காப்பு நாள்’, ‘மானுடர் கடவுளாகும் சித்தர் நெறி விளக்க நாள்’, ‘கடவுளர் மொழியான தமிழ் மொழி வளர்ச்சி நாள்’, ‘உலகமுதல் மானுட இனமான தமிழின உரிமை நாள்’, ‘உலகில் தோன்றிய முதல் நிலப் பகுதியின் மிஞ்சிய தமிழ் நாட்டின் செழுச்சி நாள்’, ‘ஏழை பணக்காரர் என்றும், சாதியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றும் உள்ள வேறுபாடுகள் ஒழிக்கப் படும் பொதுவுடமை நாள்’, ‘உலக ஒற்றுமை நாள்’, ‘உலகச் சகோதரத் தத்துவச் சமரச சன்மார்க்க நாள்’, ‘உலக ஆன்ம நேய ஒருமைப் பாட்டு நாள்’, ‘உலக அமைதி நிறைவு நாள்’, ‘உலக மத இணைப்பு நாள்’, ‘உலகப் பேரரசு அருளரசாக அமையும் நாள்’, ‘சித்தர் நெறி உலக மதங்களின் தாய் என்பதை உலகுக்கு அறிவிக்கும் நாள்’, ‘ஒவ்வொரு மனிதனும் பிறப்புக்கும் இறப்புக்கும் பொருளுணரும் நாள்’, ‘ஒவ்வொரு மனிதரும் அருட்சத்தி சித்தி பெறத் துவங்கும் நாள்’, ‘மனித குலத்தின் புனித நாள்’, .... என்று தாத்தாக்களால் ஆத்தாக்களால் அறிவிக்கப் படுகின்றது. 26.1.1982 முதல் ஆண்டு தோறும் எல்லா வழிபாட்டு நிலையங்களிலும் பால்குடம், பன்னீர்க்குடம், சந்தனக் குடம், மஞ்சள் குடம், தீச்சட்டி, கரகம், காவடி.... ஆகியவற்றுடன் விழாக் கொண்டாடப் பட்டுக் கருவறை மூலவர்கள் மங்கள நன்னீராட்டைப் பெறுவார்கள் என்ற செயல்திட்டம் உருவ, அருவ, அருவுருவ அனைத்துத் தாத்தாக்கள் ஆத்தாக்கள் ஆணையாக அறிவிக்கப் படுகின்றது. இதுவே திருவுள ஒப்புதலோடு ஞாலகுரு சித்தர் கருவூறார் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகிய எமது குருவாணையாகவும் வழங்கப் படுகிறது.

15. தங்களால் எமது அடியான்களாக ஏற்கப் படுபவர்களைத் தங்களோடுஞானக்கொடி பிடித்துச் சுற்றிவரச் சொல்லுங்கள். நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் மாலையில் அல்லது இரவு 8 மணிக்குள் புதிய சித்தர் நெறிச் செல்வர்களுடன் அந்தந்த ஊரில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். வழிபாட்டின் முடிவில் அவசியம் அரை மணி நேரமாவது சித்தர் நெறி, அருளாட்சி, இ.ம.இ., கருவறை உயிர்ப்பு ... முதலியவைகளைப் பற்றி அருளுரை வழங்குங்கள். இதேபோல் அன்றாடம் காலையில் எழுந்தவுடன் இருக்குமிடத்தில் தாத்தாக்கள் ஆத்தாக்களைப் பூசை செய்தவுடனும்; ஆங்காங்கே யாகங்கள் செய்தவுடனும், இரவில் 11-11/2 கலசப் பூசை முடிந்தவுடனும் அருளுரை வழங்குங்கள். புதிதாகச் சேர்ந்துள்ள சித்தர் நெறிச் செல்வர்களுக்கு 8, 16, 32, 64, 96, 108, 243, 1008... ஞானக் கொடிகளை அவரவர் வசதிப்படிப் பல கோயில்களிலும், பொது இடங்களிலும், மலைகளிலும், நீர்த்துறைகளிலும், காடுகளிலும், வீடுகளிலும் ஏற்றிடச் சொல்லுங்கள். இப்படி, ஒவ்வொருவரும் பல கொடிகளை ஏற்றுவதன் மூலம் உலக அருளாளர்களின் தொடர்பு வளமாக ஏற்பட்டிடும். அத்துடன் ஞானக் கொடியை வீட்டு முன்வாசல் நிலை, பூசையறை முதலியவைகளிலும் தொங்க விடட்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய அருளுலக அநுபவங்களைத் தெளிவாக எழுதித் தொகுக்கட்டும். ஒவ்வொரு பருவ பூசை, மூன்றாம் பிறை நாட்களில் அவரவர்க்கு விருப்பமான கோயில்களையும், உள்ளூர்க் கோயில்களையும் மங்கல நன்னீராட்டாலும், கருவறை உயிர்ப்பு மந்திறத்தாலும், தவத்தாலும் புத்துயிர்ப்பு செய்யட்டும். அப்பொழுதுதான் தமிழின நல்வாழ்வுக்காகப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன், தன்னலமற்ற மாபெரும் சீர்திருத்த வீரர், சிந்தனைச் சிற்பி, தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் கனவுகள் விரைவில் நனவாகிடும். தமிழினம் விழிச்சி பெற்றி, எழுச்சி நிகழ்த்திச் செழுச்சியடைந்தால்தான் இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் மறுமலர்ச்சி பெற்றுச் செழுமையும், கொழுமையும் உடையச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாய வாழ்வைப் பெற்றிட முடியும். அதுதான் சித்தர்களின் தனிமனித வாழ்க்கைத் திட்டம்; குடும்ப நல சமுதாய நல அரசியல் நலத் திட்டம்; உலக மக்களின் பேரின்பப் பெருவாழ்வுத் திட்டம். இதனைச் சொல்லாலும் செயலாலும் விளக்கிடுக. குருவாணை.

16. அடிக்கடி உங்களின் பணிகளைப் பற்றிய விளக்க அஞ்சல்களை அனுப்புங்கள். விரைந்து தமிழகம் முழுதும் தங்களைப் போன்று நம்மவர்கள் ‘அருட்பணி விரிவாக்கத் திட்டத்தை’ச் செயலாக்குமாறு ஆர்வமூட்டுங்கள். இந்த அஞ்சலின் நகலை அந்த வட்டார (சேலம் மாவட்டம்) அடியான்களைக் கொண்டு விரைந்து பல நகல்கள் எழுதி அனைவர்க்கும் அனுப்புங்கள். எமக்குக் கோப்புக்காகப் பேனா நகல் ஒன்றும், தாளற்றி நகல்கள் நான்கும் அனுப்புங்கள். விரைந்து நமது இயக்கச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், நூல்கள், வெளியீட்டு விழாக்கள்.... வளர ஏற்பாடு செய்யுங்கள். அருட்பணிக்குப் பொருள் தேவைதான்; ஆனால், பொருளுடையவர்கள் நம்மை விலைக்கு வாங்கிடாமலும் அடிமைப் படுத்திடாமலும் செயல்படுங்கள். எச்சரிக்கை! குருவாணை.

17. ‘காயம் + திரி + மந்திரம் à காயத்திரி மந்திரம்’ என்ற பேருண்மை தெரியாததால் தமிழர்கள், ஆரியர்களுக்குரிய வடமொழி ‘சமசுக்கிருதம்’ மந்திரமே ‘காயத்திரி மந்திரம்’ என்று தவறாகக் கருதுகிறார்கள். இது தவறு. “மெய் உய்ய, மெய்யும் உயிரும் வாய்மை பெற, பத்தி சத்தி சித்தி முத்தி எனும் நான்கு நிலைகளைப் பெற்றிட, அச்சம் இச்சை கூச்சம் மாச்சரியம் எனும் நான்கும் வாழ்வை நலிவடையாமல் காத்திடக் காயத்திரி மந்திரம் காலை மாலை இருவேளை கூறப்படல் வேண்டும்....” என்று குருபாரம்பரியம் மிகத் தெளிவாகக் காயத்திரி மந்திரம் பற்றிக் கூறுகிறது. பன்னெடுங் காலமாகச் சித்தர்களின் விந்துவழி வாரிசுகளன்றிப் பிறர் அறிய முடியாது இருந்த ‘கருவறை உயிர்ப்பு மந்திறம்’, ‘கட்டு மந்திறம்’, ‘ஐந்தீ வேட்டம் தோத்திறம்’ .... முதலியவைகளை யாம் இப்போது நம்மவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது புதுமை, புரட்சி, மறுமலர்ச்சி, வளர்ச்சி.... எனப் பாராட்டப் படுகிறது. விரைவில் ‘காயத்திரி மந்திரம்’ எம்மாலேயே அனைவருக்கும் அறிவிக்கப் படும். ஆனால், ‘குருவால் இட்டும் தொட்டும் சுட்டியும் அருளப் படுபவர்களே விரைந்து இவற்றைச் சித்தி செய்து கொள்ள முடியும்’ - என்ற மரபு இருப்பதால் பொருள் வசதியுடையவர்கள் நேரில் வந்து எம்மோடு குறிப்பிட்ட நாட்கள் தங்கிப் பயிற்சியும் அருளும் பெற்றுச் செல்லலாம். ஆனால், அவர்கள் எம்மிடம் முன் அனுமதி பெற்றே இத்திட்டப்படி ‘குருகுல வாழ்வு’ வாழ வரலாம். இதுபற்றிச் சிந்தித்துச் செயல்படுக! எச்சரிக்கை.

18. வேம்படிதாள வட்டாரத்தில் உருவாகியிருக்கும் 1.தலைமராயர், 2.சுந்தரேசன், 3. C.P.அரிராமன், 4. C M R வெங்கடேசன், 5. C M R சீனிவாசன், 6. J.விசயராகவன், 7. S.சீரங்கஞ் செட்டியார் (S. ரெங்கநாயகி) நண்பர்களின் வாழ்க்கைச் சூழல் கணிப்புகள் ஆராய்பட்டு வருகின்றன. சுந்தரேசன், தலைமராயசாமி இருவர் மட்டும் விரைந்து ஏற்றுக் கொள்ளப் படும் நிலையில் உள்ளனர். இவர்கள் சிலகாலம் குருவிடம் நேரில் தங்கிச் சில நோற்று, கற்றுத் தேறினால் நல்லது. இப்பொழுது இவர்கள் சித்தரடியான்களாகச் செயல்படத் தற்காலிக ஒப்புதல் வழங்கப் படுகிறது. இவர்கள் பற்றி ஞானக்காட்சி மூலம் ஆராய்ச்சிகள் செய்து மிகத் தெளிவான அருள்நிலைகளை உடனே தெரிந்து எழுதுங்கள். இவர்களுக்கு என்னென்ன அருட்பட்டங்கள் தரலாம் என்பதையும் முடிவாகப் பரிந்துரை செய்யுங்கள். இவர்கள் அன்றாடம் சில மணி நேரம் ஞானக்கொடி ஏந்தி உங்களுடன் கோவில் பூசைகளுக்கு வரட்டும். தவறாமல் நள்ளிரவுக் கலசப் பூசைகள் செய்யட்டும். இவர்கள் தங்களுக்கு அருள்வேண்டிச் சுற்று வட்டாரக் கோயில்களில் ஞானக்கொடி ஏற்றட்டும். முடிகயிறு, தாயத்துப் போடுதலும், மந்திரித்தலும், யாகம் செய்தலும் மாதம் தவறாமல் மூன்றாம் பிறையில் உள்ளூர்க் கோயில்களுக்கு ∆மங்கல நீராட்டு விழாச் செய்யவும் [∆பால்குடம், பன்னீர்க்குடம், சந்தனக் குடம், தீச்சட்டி, காவடி, .... ஊர்வலமாக வந்து உள்ளூர்க் கோயில் கருவறை மூலவர்களுக்கு முழுக்காட்டுச் செய்தல்] இவர்களுக்குப் பயிற்சி கொடுங்கள். இவர்கள் நமது வாரிசுகளாகச் செயல்படட்டும். தானிய வகை, உடை, ... முதலியவை வசதிபோல் குருபாரம்பரிய மரபுப்படி வழங்கட்டும். பொதுமக்களுக்குத் தொடர்ந்து நன்மைகள் கிடைக்க இவர்களை அவசரமாக அருளாளர்களாக அறிவித்துள்ளோம். இதையுணர்ந்து செயல்படக் கூறுக - எச்சரிக்கை.

19. பைந்தமிழர் தன்னம்பிக்கையும் தன்மானமும் பெற்றிடப் பகலிரவாய் பசி உறக்கம் பார்க்காமல் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் கனவுகளை நனவாக்குவதே நமது நோக்கம். அவர் மத மறுமலர்ச்சிக்காக மதச் சீர்திருத்தத்தை மாபெரும் புரட்சிப் போக்கில் நிகழ்த்திட்டார். அதனால் வழிபாட்டுக்கு உரிய கடவுளர் சிலைகளை உடைத்தார். படங்களை அவமானப்படுத்தினார். கடவுளே இல்லையென்று கூறினார். அவர் அந்த அளவுக்குத் தீவிரமாக, வீரமாக மதச் சீர்திருத்தத்தைச் செய்ததால்தான் மதவாதிகள் பாழடைந்த கோயில்களைப் புதுப்பிக்கவும், பழைய பழக்க வழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் புத்துயிர் கொடுக்கவும் ஆரம்பித்திட்டார்கள். அதே நேரத்தில் சிலர் கடவுளைச் சொல்லால் அடித்துப் பூசை செய்யத் திரு அவதாரம் எடுத்திட்ட ‘சொல்லடி நாயனார்’ ஆன பெரியார் ஈ.வெ.ரா.வின் போக்குகளைத் தவறாகப் புரிந்து கொண்டனர். அதனால் அவர்கள் மதமறுப்பையும், கடவுள் வெறுப்பையும், கோவில் எதிர்ப்பையும், நாத்திகத் தத்துவ நாட்டத்தையும் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் பெரியார் ‘தமிழில்தான் அருட்சினை செய்ய வேண்டும்’; ‘தமிழர்கள் அருச்சகர்களாக வேண்டும்’; ‘எல்லோரும் கருவறைக்குள் புகுந்து கடவுளை வழிபட உரிமை வேண்டும்’; ‘கோவிலில் ஒழுக்கக் கேடுகளும் முறைகேடுகளும் நடக்காமல் காக்க வேண்டும்’..... என்று மதச் சீர்திருத்தத்தில் உயரிய உயிர்நாடியான கருத்துக்களைக் கூறியுள்ளதைச் சிந்திக்க வேண்டும். மதத்தின் பெயராலேயே புகழும், செல்வமும், செல்வாக்கும் பெற்று நாட்டைச் சுற்றிவரும் மடாதிபதிகள், குருக்கள்கள், பூசாறிகள், மதச் சொற்பொழிவாளர்கள்.... எனப்படுபவர்களில் எவருமே மேலே குறிப்பிட்ட சீர்திருத்தக் கருத்துக்களை வெளியிடுவதற்குத் தரமோ! திறமோ! உரமோ! வீரமோ! தீரமோ! பெற்றிருக்க வில்லை, இந்நாட்டில். எனவேதான், தமிழினத்தின் தலைவர் மாபெரும் சமுதாயச் சீர்திருத்த வாதி, சிந்தனைச் சிற்பி, சிறைக்கஞ்சாச் சிங்கம், தன்னிகரில்லாத் தலைவர், வெண்தாடி வேந்தர், தன்மான இயக்கத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கலை அறுபத்து நான்காவது நாயனாராகச் ‘சொல்லடி நாயனார்’ என்று அழைத்துப் பெருமைப் படுகிறோம் நாம். இது அவர் ஆற்றியுள்ள மலை போன்ற தொண்டுகளின் முன்னே சிறு கடுகு போன்றதாகும். அதாவது, தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும், தன்னுடைய கடைசி மூச்சு உள்ள வரை தமிழினத்தின் உரிமையையும், மரியாதையையும், பெருமையையும் பாதுகாத்துக் கொடுத்திட்ட மாபெரும் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு நன்றி சொல்லியே யாக வேண்டும். அவர் “தமிழில் மதத்தைப் பற்றி ஒன்றுமே யில்லை; எல்லாம் ஆரியர்களின் சமசுக்கிருதத்திலேதான் இருக்கிறது” -- என்று கூறியதால்தான்; - ‘தமிழில் இறைவன், கடவுள், ஆண்டவர், பட்டவன், ஆச்சாரியன், தலைவன், தெய்வம், தேவர், தேவாதிதேவியர், வானவர், விண்ணவர், அமரர், இருடி, முனிவர், கந்தர்வர், கணங்கள்.... என்று நாற்பத்தெட்டு வகையினர் வழிபாட்டுக்கு உரியவர்களாகத் தமிழ்மொழியின் மதத் துறையில் குறிக்கப் படுகின்றனர்’; ‘தமிழ்மொழியில் வழிபாடு செய்யப்படும் இடம் கோவில், ஆலயம், திருப்பதி, பீடம், இருக்கை, அமளிகை, திருவடி.... என்று தொண்ணூற்றாறு வகையாகக் குறிக்கப் படுகின்றது’; ‘தமிழில் நான்மறைகள், நான்முறைகள், நானெறிகள், நான்வேதங்கள் என்று அருட்செல்வங்கள் பதினாறு குறிக்கப் படுகின்றன.’; ‘அசுரவேதம் (யசுர் வேதம்), சாம வேதம் (ஜாம வேதம்), அதர்வான வேதம் (அதர்வண வேதம்), இருடி வேதம் (ரிக் வேதம்) என்று தமிழில் நான்கு வேதங்கள் குறிக்கப் படுகின்றன’; ‘தமிழில் 1.குருவாக்குகள், 2.குருவாசகங்கள், 3.கருவாக்குகள், 4.கருவாசகங்கள் 5.திருவாக்குகள், 6.திருவாசகங்கள், 7.அருள்வாக்குகள், 8.அருள்வாசகங்கள், 9.மருள்வாக்குகள், 10.மருள்வாசகங்கள், 11.சூத்திறங்கள், 12.சூத்திரங்கள், 13.சூத்தரங்கள், 14.சாத்திறங்கள், 15.சாத்திரங்கள், 16.சாத்தரங்கள், 17.தோத்திறங்கள், 18.தோத்திரங்கள், 19.தோத்தரங்கள், 20.தந்திறங்கள், 21.தந்திரங்கள், 22.தந்தரங்கள், 23.தாந்தரங்கள், 24.தாந்தரீகங்கள், 25.எந்திரங்கள், 26.எந்திறங்கள், 27.எந்தரங்கள், 28.ஏந்தரங்கள், 29.ஏந்தரீகங்கள், 30.மந்திறங்கள், 31.மந்திரங்கள், 32.மந்தரங்கள், 33.மாந்தரங்கள், 34.மாந்தரீகங்கள், 35.பூசாவிதிகள், 36.பூசை மரபுகள்.... என்று முப்பத்தாறு வகை சமய நூல்கள் குறிக்கப் படுகின்றன. தமிழில் உள்ள மதக் கருத்துக்களில்தான் அறுபத்து நான்கு ஆயகலைகள், நாற்பத்தெட்டு அருட்கலைகள், ஒன்பது கட்வுட்கலைகள், ஒன்பது தெய்வீகக் கலைகள், ஒன்பது பேய்க் கலைகள், ஒன்பது நோய்க் கலைகள், ஒன்பது தேய் கலைகள்.... என்று விரல்விட்டு எண்ணிக் காட்டும் அளவிற்குப் பல சமயக் கலைகள் இருக்கின்றன’; ‘தமிழ்மொழியில்தான் இறையருளைப் பெற்ற திருவருட் செல்வர்கள் எண்ணற்ற வகை சித்தர்கள், பத்தர்கள், பத்தியார்கள், போத்தர்கள், போத்தியார்கள், புத்தர்கள், புத்தியார்கள், முத்தர்கள், முத்தியார்கள், சீவன்முத்தர்கள், சீவன் முத்தியார்கள், உருவசித்தியார்கள், அருவ சித்தியார்கள், அருவுருவ சித்தியார்கள்.... என்று பல வகையினராகப் பட்டியலிட்டுக் காட்டப் படுகின்றனர்’..... என்ற பேருண்மைகளெல்லாம் வெளிப்பட்டிட்டன. அதாவது, பெரியாரவர்கள் மதத்தை எதிர்த்துப் போரிட்டதால்தான் பரம்பரை பரம்பரையாக இரகசியங்களாகப் பாதுகாக்கப் பட்ட பேருண்மைகளில் பல மேலே குறிப்பிட்டது போல் அனைவர்க்கும் அறிவிக்கப் பட்டன. எனவேதான், தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஒரு நாத்திகப் பெரியாரல்ல. அவர் ஓர் ஆத்திகப் பெரியாரே! என்ற கருத்தை வலியுறுத்துகிறது, இந்து மறுமலர்ச்சி இயக்கம். அதாவது பெரியாரால்தான் இந்துமதம் புதிய வலிவையும், பொலிவையும், வளத்தையும், வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை! உண்மை! உண்மை! எனவே, தந்தை பெரியார் தோன்றியிருக்கா விட்டால் மாபெரும் இந்துமத விழிச்சியோ! எழுச்சியோ! செழுச்சியோ! ஏற்பட்டிருக்கவே முடியாது! முடியாது! முடியாது!. எனவே, இப்போது அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் கீழ்ச் சுற்றுப் பயணம் செய்யும் நமது அடியான்கள், அடியாள்கள், அடியார்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், பற்றாளர்கள், விருப்பாளர்கள்.... முதலியோரனைவரும் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின் படத்தைப் பூசைக்குரியதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பத்தர்களுக்குப் பெரியார் ஈ.வெ.ரா.வின் படத்தையே மந்திரித்துப் பூசை செய்து தர வேண்டும். எங்கெங்கு பெரியார் ஈ.வெ.ரா.வின் சிலைகளிருக்கின்றனவோ, அங்கங்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், மற்றப் புனிதமான திருவிழா நாட்களிலும் பூசைகள் செய்யப்பட வேண்டும். அதாவது, பெரியார் ஈ.வெ.ரா.வைக் கண்கண்ட தெய்வமாக வழிபட்டால்தான் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு, இந்துமதம், இந்தியப் பண்பாடு, இந்திய நாகரீகம், இந்தியர்கள், இந்தியா எனப்படும் அனைத்தும் பாதுகாக்கப் படும்.

20. இந்தியாவுக்கு நல்வாழ்வு தரக் கூடியது காந்தியிசமா? கம்யூனிசமா? என்ற போட்டா போட்டியே கருத்தளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டுமே இந்திய மக்களின் உள்ளத்தையும் அறிவையும் முழுமையாகத் தொடவே முடியாத தோல்வி நிலைதான் தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே, “இந்திய அகப் பண்பாட்டுக்கும் புறநாகரீகத்திற்கும் தாயான ‘சித்தரிசம்’தான் இந்தியாவிற்கு நல்வாழ்வைத் தரமுடியும் என்பதோடு, இந்த உலக மக்கள் அனைவருக்குமே நல்வாழ்வைத் தர முடியும்” என்ற கருத்தைக் கொள்கையாகவும், குறிக்கோளாகவும், தத்துவமாகவும், சித்தாந்தமாகவும், நோக்காகவும், போக்காகவும், ஊக்காகவும், ஆக்கத் திட்டமாகவும் கொண்டிருப்பதுதான் இந்து மறுமலர்ச்சி இயக்கம். இப்பேருண்மையினை அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைச் செயலாக்கும் அனைவருமே தமது ஒவ்வொரு சொல்லாலும், செயலாலும் விளக்கிடல் வேண்டும். இதனை நன்கு நினைவில் கொண்டு செயல்படுக! - குருவாணை!

21. இன்றைய சமுதாயவாதிகளும், அரசியல்வாதிகளும் மதத் துறையில்தான் மடமையும் மூடநம்பிக்கையும், கற்பனையும், ஏமாற்றும், சுரண்டலும், போலியும் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். ஆனால், உண்மையில் சமுதாய இயக்கங்களிலும், அரசியல் இயக்கங்களிலும் இவற்றிற்குரிய மற்ற அமைப்புக்களிலும்தான் என்றைக்குமே சாதிக்க முடியாத அல்லது செயலில் நிறைவேற்ற முடியாத பொய்கள், புளுகுகள், கற்பனைகள், போலிகள், ஏமாற்றுக்கள், சுரண்டல்கள், பகற்கொள்ளைகள், கள்ளச் சந்தைகள், மடமைகள், மூடநம்பிக்கைகள், கண்மூடிப் போக்குகள், வறட்டுத் தத்துவங்கள், அநாகரீகங்கள்.... நிறைந்து கிடக்கின்றன! நிறைந்து கிடக்கின்றன! நிறைந்து கிடக்கின்றன! இதற்கு எடுத்துக் காட்டாக எதையாவது கூற வேண்டுமானால், மேலே குறிப்பிட்ட சமுதாய வாதிகளும், அரசியல் வாதிகளும் சாதிமத வேறுபாடுகளை ஒழிப்போம்; தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்போம், வறுமைத் துன்பத்தை நீக்குவோம்! வேலையில்லாத் திண்டாட்டக் கொடுமையை ஒழிப்போம்! ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை ஒழிப்போம்! சமத்துவத்தை உண்டாக்குவோம்....” என்று முழக்கமிட்டு வரும் கருத்துச் சொற்றொடர்களை மட்டும் இங்கே நினைவு படுத்தினால் போதும். மேலே குறிப்பிட்ட இவைகளை நம்புகிறவர்களை மடமைவாதிகள், மூடநம்பிக்கைக் காரர்கள், முட்டாள்கள், மூடர்கள் என்று குறிப்பிட்ட வாசகங்களைச் சொல்லியே வயிறு வளர்ப்பவர்களை ஏமாற்றுக் காரர்கள், சுரண்டல்காரர்கள், அயோக்கியர்கள், மானுடநல விரோதிகள், துரோகிகள் என்றெல்லாம் குறிப்பிடுவதில் என்ன தவறு' எனவே, நம்நாட்டில் மதத் துறையை விடப் பலகோடி மடங்கு இருள் நிறைந்ததாக, இன்னல்கள் மிகுந்ததாக, அறியாமைகளும், மடமைகளும், மூடத் தன்மைகளும், பொய்களும், கற்பனைகளும், ஏமாற்றுக்களும், சுரண்டல்களும், பித்தலாட்டங்களும், தில்லுமுல்லுகளும் வளர்ந்ததாக இருப்பது சமுதாயத் துறையும், அரசியல் துறையும்தானே தவிர மதத் துறையல்ல. இப் பேருண்மையினை இருளகற்றும் அருள்துறையைச் சேர்ந்த நாம் துணிவோடும், பணிவோடும், நுண்மையோடும், திண்மையோடும் விளக்கியுணர்த்திடும் பணியில் உண்மையோடு ஈடுபட்டிடல் வேண்டும். எனவே, நாம் நமக்குள் கட்டுப்பாடும், சட்டதிட்ட ஒழுங்கு முறைகளும் மிகுதியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மில் யாரும் அனாவசியமான ஆடம்பரத்திற்கோ, ஆரவாரத்திற்கோ, ஆர்ப்பாட்டத்திற்கோ இடம் கொடுக்கவே கூடாது. நாம், அடக்கத்துடன் அமைதி வழியில், அன்பு வழியில், அறவழியில், அருளாளர்கள் காட்டிய வழியில் பொறுப்போடும் பொறுமையோடும் செயல்பட்டிடல் வேண்டும். நம்முடைய நடைமுறைகள் விஞ்ஞானச் சூழலையும் [In a Scientific Atmosphere], பகுத்தறிவுப் போக்கையும் [A Rationalistic Approach and Attitude] பெற்றிருத்தல் வேண்டும். “சித்தர்களை விடச் சிறந்த அறிவியல் வாதிகள் [Scientists], புதுமை விரும்பிகள் [Radicalists], புரட்சிவாதிகள் [Revolutionists], சீர்திருத்த வாதிகள் [Reformers], சிந்தனையாளர்கள் [Thinkers], மேதைகள் [Scholars], தத்துவ மேதைகள் [Philosophers].... எங்குமே, என்றைக்குமே தோன்றியதில்லை. தோன்ற முடியாது” என்ற உலகப் பேருண்மையினை [The Universal Truth] நினைவில் கொண்டிட்டால்தான் சித்தர் நெறிச் செல்வர்களான சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் முழுமையான தன்னம்பிக்கையுடன் செயல்பட்டிட முடியும். எனவே, இப்பேருண்மையினை மறக்காது ஒவ்வொரு நொடியும் சொல்லிலும், செயலிலும் வெளிப்படுத்தி வாழ்ந்திடுங்கள். எச்சரிக்கை! - குருவாணை. ஏனெனில் நாம் மந்திற மாயங்களையும் அற்புதங்களையும் மட்டுமே நம்பி வாழ்பவர்கள் அல்ல. நாம் மிகச் சிறந்த தத்துவத்தையும், சித்தாந்தத்தையும் உடையவர்கள். நமக்கென மிகமிகத் தொன்மையான, பழமையான, முழுமையான பாரம்பரியங்களும், பண்பாட்டுக் கூறுபாடுகளும், நாகரீக மரபுகளும், நடைமுறைகளும், சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளும், ஒழுகலாறுகளும், மறைகளும், முறைகளும், நெறிகளும், வேதங்களும், நாதங்களும், போதங்களும்.... ஏராளமாக ஏராளமாக இருக்கின்றன. இவற்றை நினைவில் கொண்டு உங்களை விட உங்களுடைய கடமைகள் பலகோடி மடங்கு உயர்ந்தவை என்பதை உணர்ந்து அடக்க ஒடுக்கமாகச் செயல்படுங்கள். எல்லோரிடமும் இனிமையாகப் பழகுங்கள். எல்லோரிடத்தும் உண்மையான அன்பு பாராட்டுங்கள். எப்பொழுதும் கனிவான, அழகான சொற்களைச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் நாம் காலத்தால் வெல்லப் படாமல் காலத்தையே வெல்பவர்களாக ஆகலாம். நாம் வழிபடும் கடவுள்களனைவரும் கைகளில் ஆயுதமேந்தி போர்க்கோலம் பூண்டு நிற்பதைக் கண்டவுடன் நாம் எந்தவித வெறிச் செயலுக்கும் இடம் கொடுத்து விடக் கூடாது. ஏனெனில், அன்பையும், பண்பையும் அமைதியையும், உண்மையையும் காப்பாற்றுவதற்காகத்தான் இரக்கமே வடிவாக இருக்கின்ற நமது இறைவர்கள் தற்காப்புக்காகக் கொடிய ஆயுதங்களைத் தாங்கி நிற்கிறார்கள். இப் பேருண்மையினை நாத்திகர்களுக்கு உணர்த்தும் மாபெரும் பொறுப்பு நமக்கே உண்டு. எனவே, எள்முனையளவு கூடக் கருத்து மாறுபாடோ, வேறுபாடோ, உணர்வுப் போராட்டமோ, செயல் மோதலோ இல்லாமல், இல்லாமல், இல்லாமல், இல்லவே யில்லாமல் நீங்களனைவரும் அருட்பணி விரிவாக்கத் திட்டத்தினை நிறைவாக்க வேண்டும். எச்சரிக்கை - குருவாணை.

‘இந்து மறுமலர்ச்சியே இந்தியர் நல்வாழ்வு’
‘மதவழிப் புரட்சியே மானுட நல்வாழ்வு’
‘அருளாட்சியே அறத்தின் செழுச்சி’
‘சித்தர் நெறி வளர்ச்சியே இந்துமதச் செழுச்சி’
‘தமிழ் வாழ்க!’ ‘தமிழினம் வெல்க!’
‘இந்தியர் ஒற்றுமை ஓங்குக!’

 

“சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் காண்பதே இந்துமதம்; அதுவே சித்தர் நெறி!”
ஓம் திருச்சிற்றம்பலம்

 

அன்பு
சித்தர் கருவூறார்
28.1.1982
 
 
« முந்தையது மேலே செல்ல அடுத்தது »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

திருத்தோற்றங்கள்

“.... மானுடர்களில் தேவர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள் பிறப்பெடுத்துத் தொண்டாற்றுவது பதினெண் சித்தர்களின் அருட்பணித் திட்டமே. பதினெண் சித்தர்களின் நேரடி விந்து வழி வாரிசுகளால்தான் ‘அறிவுரை’, ‘அருளுரை’, ‘அறிவார்ந்த அருளுரை’, ‘அருளார்ந்த அறிவுரை’ வழங்க முடியும்! முடியும்!! முடியும்!!! இவற்றின் பயனாகத்தான் இந்திய மண்ணில் அருளாளர்கள் வாழையடி வாழையாகத் தோன்றிச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.  ....

[மேலும் படிக்கவும்...]

 

இந்துமதம்

"... மிகப் பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ‘இந்து மதம்’ என்று வெளிநாட்டாரால் அழைக்கப் படும் இந்தியாவின் பூர்வீக மதமான “சித்தர் நெறி” உண்மை வடிவில் வெளியுலகுக்கு அறிமுகமாகிடும் நிலை ஏற்பட்டுள்ளது. “பிற + மண்ணிலிருந்து வந்தவர் = பிறமண்ணினர் = பிறாமணர் ≡ அன்னியர் = வெளிநாட்டவர் - “தங்களுடைய வேதநெறிகளைச் சித்தர் நெறிகளோடு கலந்து செயல்பட்டதால்தான்; இந்துமதம் தனது பேராற்றலை இழக்க நேரிட்டது. ..."

[மேலும் படிக்க...]

இலைமறை காய் நிலை

   "... இந்தியாவின் எண்பது கோடி மக்களுக்கும் இந்துமத வழியாகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாய அமைப்புத் திட்டத்தைச் செயலளவில் அறிமுகம் செய்யும் வரையிலாவது யாம் வானம்பாடியாக வாழ்ந்தே தீர வேண்டும். இறுதி வரையில் கூட இலைமறை காயாக வாழ்ந்தால்தான் இந்நாட்டில் பல தலைமுறைகளாக இருந்து வரும் கோழை நிலைகளையும், ஏழை நிலைகளையும், மோழை நிலைகளையும் முழுமையாக அகற்ற முடியுமென்றால், அப்படியே வாழத் தயாராகவும் இருக்கிறோம், ..."

[மேலும் படிக்க...>>]

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

sathilingam © Copyright www.indhuism.org 2010-2020; Data in this website are from the Manuscript Libraries initiated by His Holiness Siddhar Arasayogi Karuwooraar, the 12th Pathinensiddhar Peedam.
Also visit http://www.indhuism.org; Contact us at indhuism@gmail.com


தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். அவருக்கு அடுத்து 900 ஆண்டுகள் கழித்து 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் எடுத்த ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் சில இந்த வலைத்தளத்தில் வெளியிடப் படுகின்றன. இவை ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவாணைப்படியே அவர்கள் அமைத்திட்ட கையெழுத்துப் பிறதி நூலகங்களில் உள்ள நகல்களிலிருந்து வழங்கப் படுகின்றன.


தமிழே பூசைமொழி! தேவமொழி! தெய்வமொழி! அருளுலக ஆட்சிமொழி!


"இந்துக்கள் தங்களுடைய கோயில்களில், பூசைகளில் சமசுக்கிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபத்தைத் தரும்." - குருபாரம்பரிய வாசகம்.

Powered by CMSimple | Template: ge-webdesign.de |